search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்தி சிதம்பரம்"

    • கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டால் தனக்குத்தான் தலைவர் பதவி என்று தனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார்.
    • தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கேட்டபோது, தலைவரை நியமிப்பதற்கு முன்பு சில நடைமுறைகளை கட்சி மேலிடம் செய்யும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாகவே தலைவர் பதவிக்காக பலர் டெல்லியில் போராடி ஓய்ந்து விட்டார்கள். இதில் தொடர்ந்து தீவிரமாக இருப்பவர் கார்த்தி சிதம்பரம் எம்.பி.

    எனக்கு தலைவர் பதவி மீது நீண்ட நாள் ஆசை. எனக்கு தலைவர் பதவியை கொடுத்தால் மகிழ்ச்சி அடைவேன். கட்சியையும் வளர்த்து காட்டுவேன் என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார்.

    மாநிலத்தில் வெளிப்படையாக பேசுவதுபோல் டெல்லியில் முகாமிட்டு மேலிட தலைவர்களை சந்தித்து எப்படியாவது தலைவர் பதவியை பெற்றே தீருவது என்பதில் தீவிரமாக உள்ளார்.

    அவருக்கு ஆதரவாக அவரது தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரமும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த 11-ந்தேதி டெல்லியில் பிரியங்கா காந்தியையும் கார்த்தி ப.சிதம்பரம் சந்தித்து பேசியிருக்கிறார். அவரிடமும் தலைவர் பதவி மீதான தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே ராகுல், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரையும் சந்தித்து பேசி இருக்கிறார்.

    தனக்கு எம்.பி. பதவியும் வேண்டாம். வேறு எந்த பதவியும் வேண்டாம். தலைவர் பதவி மட்டும் போதும். அது தனது நீண்ட நாள் ஆசை என்பதையும் தெரிவித்துள்ளார்.

    மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில், 2026 சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பக்கபலமாக நின்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயார் என்று உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டால் தனக்குத்தான் தலைவர் பதவி என்று தனது ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார்.

    இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கேட்டபோது, தலைவரை நியமிப்பதற்கு முன்பு சில நடைமுறைகளை கட்சி மேலிடம் செய்யும். அதாவது தமிழகம் உள்பட சில மாநிலங்களுக்கு இன்னும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.

    முதலில் பொறுப்பாளரை நியமிப்பார்கள். அவர் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி தலைவர் பதவிக்கு தகுதியானவர்கள் பெயர் பட்டியலை தயார் செய்து மேலிடத்துக்கு வழங்குவார். அதை வைத்து தான் புதிய தலைவரை தேர்வு செய்வார்கள்.

    இதற்கிடையில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த 4 மாநிலங்களிலும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டியது உள்ளது. எனவே இன்னும் நிறைய காலஅவகாசம் எடுப்பார்கள். அதற்குள் பாராளுமன்ற தேர்தல் வேறு நெருங்கி வருகிறது. எனவே டெல்லி மேலிடம்தான் முடிவு செய்யும் என்றார்கள்.

    • இருவரும் திரவ நிலையில் எதையோ வீசியதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
    • பாராளுமன்ற சபை வளாகத்துக்குள் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என ஆதிரஞ்சன் சவுத்ரி எம்.பி. கூறினார்.

    பாராளுமன்றத்தில் 2 பேர் நுழைந்த சம்பவம் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறுகையில், "பாராளுமன்றத்தில் உள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர். அவர்கள் இருவரும் திரவ நிலையில் எதையோ வீசினார்கள். அது விழுந்து மஞ்சள் நிற புகையாக வெளிப்பட்டது. அப்போது கண்களில் எரிச்சல் ஏற்பட்டது" என்றார்.

    ஆதிரஞ்சன் சவுத்ரி எம்.பி. கூறுகையில், "பாராளுமன்ற சபை வளாகத்துக்குள் பாதுகாவலர்கள் யாரும் இல்லை. இதனால் எம்.பி.க்களே மர்ம மனிதர்கள் இருவரையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் சபை காவலர்களை வரவழைத்து அவர்களிடம் 2 பேரையும் ஒப்படைத்தனர்" என்றார்.

    • தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார்.
    • என் மீது 3 வகையான வழக்குகள் உள்ளன. அவை மிகவும் போலியானது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய மந்திரியாக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும், இதற்காக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து இருந்தது.

    பஞ்சாப்பில் டி.எஸ்.பி.எல். எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலைய பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுதர அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர் ராமன் என்பவரும் லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார்.

    இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் பண மோசடி வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்று அவருக்கு அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் அவர் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகவில்லை. தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடரில் தான் பங்கேற்று இருப்பதாக அவர் அமலாக்கத்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கார்த்தி சிதம்பரம் கூறும்போது, "என்மீது 3 வகையான வழக்குகள் உள்ளன. அவை மிகவும் போலியானது. எனது வக்கீல்கள் குழுவால் இது கையாளப்படும்" என்றார்.

    • 5 மாநில தேர்தல் நடந்ததால் சற்று தொய்வாக இருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    • தலைவர் பதவிக்காக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தலைவர் பதவியை பிடிக்க பலர் முயற்சி செய்தும் மேலிடம் இன்னும் எந்த சிக்னலும் காட்டவில்லை.

    ஆனால் அனைவரையும் அரவணைத்து இணக்கமாக செல்லும் உணர்வு படைத்தவரை தலைவராக நியமிக்க மேலிடம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், ஜோதி மணி ஆகிய நால்வரில் ஒரு வரை நியமிக்கலாம் என்றார். 5 மாநில தேர்தல் நடந்ததால் சற்று தொய்வாக இருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.


    தலைவர் பதவிக்காக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்கள். தலைவர் பதவி மீது தனக்கு ஆசையாக இருப்பதாக வெளிப்படையாகவே கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.

    நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். அப்போது தனக்கு தலைவர் பதவி தந்தால் சிறப்பாக செய்வேன் என்று தெரிவித்துள்ளார். கர்நாட காவில் டி.கே.சிவகுமாரும், தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டியும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்சி நடத்தியதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதேபோல் தமிழ்நாட்டின் தலைமை பதவி எனக்கு வழங்கினால் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வர உழைக்க தயாராக இருப்பதாக கார்கேவிடம் உறுதியளித்துள்ளார். அதை கேட்டுக் கொண்ட கார்கே பார்க்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    • ராஜிவ் காந்தியுடன் 17 பேர் கொல்லப்பட்டதை மூடி மறைக்க கூடாது என்றார் கார்த்தி சிதம்பரம்
    • ராஜிவ் காந்தியின் முடிவு அவரே தேடி கொண்ட ஒன்று என்றார் வன்னி அரசு

    தி.மு.க.வின் தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினரான தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு நேர்காணலில் "சரித்திர புகழ் வாய்ந்த தலைவர் ஒருவருடன் உணவருந்த வேண்டும் என்றால், விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு அருந்த விரும்புகிறேன். அப்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக அவரிடம் மன்னிப்பும் கேட்பேன்" என கருத்து தெரிவித்தார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டார்.

    அதில் அவர் கூறியதாவது:

    பிரபாகரனை பாராட்டி பேசுவது இந்திய காங்கிரஸ் கட்சியினருக்கு இசைவான கருத்து அல்ல. ராஜிவ் காந்தியும், அவருடன் 17 பேரும் விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட படுகொலை சம்பவத்தை மூடி மறைத்து பிரபாகரனின் புகழ் பாட நினைப்பது தவறு. இந்துத்துவா தேசியவாதம் போல்தான் பிரபாகரனின் தமிழ் தேசிய சித்தாந்தங்களும் மிக சிறுமையானது.

    இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பதிவிட்டார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் புத்த, சிங்கள ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், சிறுபான்மை தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகவும் போராடிய பெரும் தலைவர், மேதகு பிரபாகரன்.

    சனாதன இந்துத்துவம் ஆதிக்க மனப்பான்மையை வலியுறுத்துகிறது. மேதகு பிரபாகரனின் அரசியல், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எப்போதுமே ஆதரவு அளித்ததில்லை.

    திரு. ராஜிவ் காந்தியின் படுகொலையை காரணம் காட்டி எத்தனை நாட்கள் தமிழ் மக்களை நீங்கள் இழிவு படுத்துவீர்கள்? தமிழ் ஈழத்தில் தமிழர்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தங்கள் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வர வேண்டிய தருணம் இது என்பதை உணருங்கள்.

    சிறுபான்மை தமிழர்களுக்கு ஆதரவாக நின்றதால் மேதகு பிரபாகரனுக்கும் விடுதலை புலிகளுக்கும் திருமதி இந்திரா காந்தி ஆதரவு அளித்தார்.

    ராஜிவ் காந்தியின் படுகொலையை யாரும் கொண்டாடவில்லை. அவரது முடிவு அவரே தேடி கொண்ட ஒன்றாகும்.

    மேதகு பிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதுதான் இந்துத்துவாவை எதிர்ப்பதற்கு ஒப்பாகும்.

    இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டுள்ளார்.

    தி.மு.க.வுடன் தமிழகத்தில் ஒரே கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கிய பிரமுகர்களின் இந்த சித்தாந்த கருத்து மோதல் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

    • அண்ணாமலைக்கு வருவதை விட அதிகமான கூட்டம் நடிகர் வடிவேலுக்கு வந்தது உண்டு.
    • எங்களால் ஓரளவுக்கு தான் செயல்பட முடியும்.

    காங்கிரஸ் எம்.பி.கார்த்தி ப.சிதம்பரம் கூறியதாவது:-

    அரசியலில் அண்ணாமலைக்கு கூட்டம் வருவதை வைத்து அவ்வளவும் ஓட்டாக மாறி விடும் என்று நினைக்க முடியாது. அண்ணாமலைக்கு வருவதை விட அதிகமான கூட்டம் நடிகர் வடிவேலுக்கு வந்தது உண்டு. தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்த போது வந்த கூட்டத்தை பார்த்து நானே அசந்து இருக்கிறேன். அந்த அளவுக்கு கூட்டத்தை வேறு யாருக்கும் நான் பார்த்ததில்லை. ஆனால் என்னாச்சு? எனவே அண்ணாமலைக்கு வரும் கூட்டம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்ப முடியாது.

    ஏனென்றால் தமிழ்நாட்டில் பா.ஜனதாவை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனக்கும் ஒரு ஆசை உண்டு. காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வேண்டும் என்ற சின்ன ஆசை. அதை விட பெரிய ஆசை ஆட்சி செய்ய வேண்டும் என்றும் இருக்கிறது. சினிமா துறையில் இருப்பவர்கள் கூட முதல்வராக ஆசைப்படும் போது இத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கும் எனக்கும் அந்த ஆசை வரத்தானே செய்யும்? ஆனால் அதற்கான காலமும், நேரமும் இருக்க வேண்டும். என்னால் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க முடியும். அண்ணாமலை தமிழகத்திற்கு என்று என்ன திட்டம் வைத்துள்ளார். எந்த பாதையில் தமிழகத்தை நடத்தப்போகிறார். அது பற்றி அவர் என்ன சொல்லி இருக்கிறார். இப்போது அவர் அதிகமாக பேசப்படுவதற்கு காரணம் எதிர் கட்சியான அ.தி.மு.க. மவுனமாக இருப்பதால் பா.ஜனதா செய்வதெல்லாம் எடுபடுகிறது. எங்களை பொறுத்தவரை எதிர் கட்சியும் இல்லை, ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கிறோம். எனவே எங்களால் ஓரளவுக்கு தான் செயல்பட முடியும். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ரவுடிகள் பா.ஜனதாவில் தான் இருக்கிறார்கள். அவர்களை வைத்துக்கொண்டு தான் நல்லாட்சியை தரப்போகிறார்களா?

    • எனக்கு மன உளைச்சல் எல்லாம் கிடையாது. நேரத்தை வீணடிக்கிறார்கள்.
    • அமலாக்கத்துறை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. எதிர்கட்சிகளை அடக்கும் இலாகா.

    கார்த்திப.சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது :-

    அமலாக்கத்துறையால் கிடுக்கிப்பிடி அப்படி... இப்படி... என்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் கிடையாது. எனக்கு 20 முறை சம்மன் அனுப்பி இருக்கிறார்கள். இது நேரத்தை வீணடிக்கவும், மன உளைச்சலை ஏற்படுத்தவும் தான். எனக்கு மன உளைச்சல் எல்லாம் கிடையாது. நேரத்தை வீணடிக்கிறார்கள்.

    அமலாக்கத்துறை என்பதெல்லாம் ஒன்றுமில்லை. எதிர்கட்சிகளை அடக்கும் இலாகா. அவ்வளவு தான். அவர்களுக்கு வேறு எந்த வேலையும் கிடையாது.

    • ஜோதி மணி தொகுதி பக்கம் வருவதில்லை என்ற புகார் பகிரங்கமாகவே கிளம்பி இருக்கிறது.
    • விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார்.

    தேர்தல் நெருங்கி வரும்போது தொகுதிகளை கணிக்கும் வேலையில் கட்சிகள் ஈடுபட்டாலும் இந்த முறை எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்று எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் காய் நகர்த்துவார்கள்.

    அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தொகுதிகளை அலசும் வேலையில் இப்போதே இறங்கி விட்டார்கள். இதில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் சிலர் தொகுதி மாறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

    கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் ஜோதிமணிக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையேயான லடாய் எல்லோரும் அறிந்ததே.

    இந்த நிலையில் ஜோதி மணி தொகுதி பக்கம் வருவதில்லை என்ற புகார் பகிரங்கமாகவே கிளம்பி இருக்கிறது. இதை சாக்காக வைத்து வருகிற தேர்தலில் அவருக்கு இந்த தொகுதி வழங்கப்பட மாட்டாது என்று தெரிய வந்துள்ளது.

    முன்பு அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை தொகுதி பக்கம் வருவதில்லை என்பதை சொல்லித்தான் ஜோதி மணியை வெற்றி பெற செய்தோம்.

    இப்போது அதே போல் ஜோதிமணியும் தொகுதி பக்கம் வராமல் இருக்கிறார். எனவே மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் தி.மு.க. ஒரு தொகுதியை இழக்க நேரிடும். எனவே இந்த தேர்தலில் கரூர் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் தீர்மானமே போட்டுள்ளனர்.

    இதற்கிடையில் இந்த தொகுதி தி.மு.க.வுக்குதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கரூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என்று பேசியது உறுதிப்படுத்தி உள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். கடந்த தேர்தலில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.

    எனவே சென்னையை ஒட்டியிருக்கும் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. அதை விடுதலை சிறுத்தைக்கு விட்டுக்கொடுக்க வற்புறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

    விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.யாக இருக்கும் மாணிக்கம் தாகூர் சிவகங்கை தொகுதிக்கு மாற விரும்புகிறார். காரணம் விருதுநகர் தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கவும் அந்த தொகுதியில் வைகோ மகனை போட்டியிட வைக்கவும் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

    எனவே காங்கிரசுக்கு சாதகமான சிவகங்கையை மாணிக்கம் தாகூர் குறி வைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தொகுதியின் 'சிட்டிங்' எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் விட்டுக் கொடுப்பாரா? என்பது தெரியவில்லை. ஆனால் ராகுல் காந்திக்கு கார்த்தி சிதம்பரம் மீது நல்ல அபிப்ராயம் இல்லாததால் தனக்கு கிடைக்க ராகுல் உதவுவார் என்று நம்புகிறார்.

    ஆனால் ப.சிதம்பரம் சோனியாவிடம் செல்வாக்குடன் இருப்பவர். எனவே யார் கை ஒங்குமோ அதை பொறுத்தே இந்த தொகுதியின் வேட்பாளரும் முடிவாகும்.

    • ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது.
    • உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திரியும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் ரெயில்வே துறையின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடந்துள்ளது. ரெயில்வேயில் புதிய நியமனங்கள் செய்யப்படாமல் ஊழியர்கள் பற்றாக்குறையால் டெக்னிக்கல், பைலட் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளிலும் ஊழியர்கள் பணி செய்யும் நேரம் அதிகரித்துள்ளது.

    எனவே உடனடியாக ரெயில்வே துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் புல்லட் ரெயில் விட நினைக்கும் மத்திய அரசு முதலில் ரெயில்வே துறையில் ரெயில்களின் வேகம் அதிகரிப்புக்கு தகுந்தவாறு கட்டுமானங்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இந்திய ரெயில்வேயின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
    • கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதற்கு பிரதி உபகாரமாக ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    நிலுவையில் உள்ள இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான 4 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 4 லட்சம் ஆகும். அவற்றில், கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்தும் அடங்கும்.

    • காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி வந்திருந்தார்.
    • வீடியோக்களை பார்த்த பலரும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

    புதுடெல்லி:

    அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததற்கும், அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர்.

    நாடு முழுவதும் காங்கிரசார் போராடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரமோ போராட்டங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. அவரது செயலை பலரும் விமர்சித்தனர்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி வந்திருந்தார். அவரை வரவேற்க காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் காத்திருந்தனர். எல்லோருக்கும் வரிசையாக கைகொடுத்தபடி உள்ளே சென்ற ராகுல் காந்தி, கைகொடுக்க காத்திருந்த கார்த்தி சிதம்பரத்தை கண்டுகொள்ளவில்லை என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களை பார்த்த பலரும் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டவண்ணம் உள்ளனர். 

    • சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தெருநாய்களின் தொல்லை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
    • தெருநாய்கள் கடித்து மனித உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ள அவர், இதில் உடனடி கவனம் செலுத்தவேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தெருநாய்களின் தொல்லை குறித்து கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நேற்று அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சமீபத்தில் ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் தெருநாய்கள் கடித்து மனித உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ள அவர், இதில் உடனடி கவனம் செலுத்தவேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுள்ளார்.

    மேலும், இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுவதை சுட்டிக்காட்டி, கருத்தடை பணிகள் தோல்வி அடைந்தது போலத் தெரிவதாகவும், எனவே மத்திய அரசு தெருநாய்களை கட்டுப்படுத்த ஒரு குழு அமைத்து தீர்வு காணவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    ×